சபரிமலை கோயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு குறைவான பெண்களை போலீஸார் அழைத்துச் சென்றதாக கூறி பெரும் போராட்டம் நடந்தது. பாஜக மட்டுமின்றி காங்கிரஸூம் இந்த பிரச்சினைகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தின. சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசன காலத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. 20 இடங்களில் ஓரிடத்தில் மட்டுமே வென்றது. 19 தொகுதிகளை காங்கிரஸ் அணி கைபற்றியது. பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
தேர்தல் தோல்வியால் கேரள அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறும் எனக் கருதப்பட்டது. ஆனால் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி பிரேம சந்திரன் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இதற்கு கேரள மாநில பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
சபரிமலை விவகாரம், தனிநபர் மசோதாவாக நாடாளுமன்றத்தில் உள்ளது. தனிநபர் மசோதாக்களின் கதி என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும். அத்தகைய சூழ்நிலை எழாமல் இருக்க உறுதி செய்வதற்காக, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க மத்திய அரசு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும். கேரள பாஜக தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.