நாடுமுழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த மனு நாளை(18-ம்தேதி) விசாரணைக்கு எடுக்கப்படும் என்று விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யா கந்த் ஆகியோர் தெரிவித்தனர்.
கடந்த 10-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்கத்தில் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம் இன்று நாடுமுழுவதும் பரவி வலுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில், " நாடுமுழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மருத்துவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் போரட்டத்தால் மக்களுக்கான மருத்துவ வசதிகள் கடுமையாக முடங்கியுள்ளன. மருத்துவர்கள் பணிக்கு வரமுடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் பலர் இறக்க நேரிடுகிறது.
மருத்துவர்களின் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம்ஆதரவு அளித்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்ற வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மருத்துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலத்தில் ஏராளமான மூத்த மருத்துவர்கள், தங்கள் பதவிகளை ராஜினமாமா செய்துவிட்டார்கள்.,
கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில், நாடுமுழுவதும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் 75 சதவீதம்பேர் வன்முறைச் சம்பவங்களை எதிர்கொள்கிறார்கள்.
50 சதவீத வன்முறைச் சம்பவங்கள் மருத்துவமனை ஐசியு பகுதியிலும்,இந்த தாக்குதலில் ஈடுபடுவோர் நோயாளிகளின் உறவினர்கள்தான் 70 சதவீதம் பேர் ஈடுபடுகிறார்கள் எனத் தெரியவந்தது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் பாதுகாப்பு உரிய வழிகாட்டு நெறிமுறைகள், சட்டம் ஆகியவற்றை இயற்ற அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அரசுமருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நாட்டுக்கு ஒருவகையில் சேவை செய்வதாகக் கருத வேண்டும்,குறிப்பாக ஏழைகள், வறுமையில் இருக்கும்மக்கள் ஆகியோருக்கு சேவை செய்கிறார்கள். ஆனால், சூழல் மருத்துவர்களுக்கு விரோதமாக இருக்கிறது " என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்த வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவஸ்தவா அவசரமாக விசாரிக்கக் கோரினார். இந்த மனுவை விடுமுறைக் கால அமர்வு நீதிபதிகள் தீபக் குப்தா, சூர்யா காந்த் ஆகியோர் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, நாளை விசாரிப்பதாக அறிவித்தனர்.