ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இன்று அக்கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
ஆந்திராவில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 23-ஐ மட்டுமே அந்த கட்சி கைப்பற்றியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசத்துக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 22 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.ஜி. வெங்கடேஷ், சி.எம். ரமேஷ், சுஜனா சவுத்ரி, காரிகாபதி மோகன் ராவ் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.
தெலுங்குதேசம் மாநிலங்களவை கட்சியை பாஜகவில் இணைத்து விட்டதாக அவர்கள் மனு அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை உறுதி செய்தது. தேர்தலுக்கு பிறகு மற்ற கட்சிகளை பாஜக வேட்டையாடி வருவதாக தெலுங்குதேசம் புகார் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில் தெலுங்குதேசம் கட்சிகயைச் சேர்ந்த மூத்த தலைவர்களான பெட்டி ரெட்டி, ஜெனார்த்தன் ரெட்டி, சுரேஷ் ரெட்டி ஆகியோர் இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதேபோல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான சஷிதர் ரெட்டி மற்றும் ஷேக் ரஹ்மத்துல்லா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.