இந்தியா

கிரேட்டர் நொய்டாவில் சமாஜ்வாதி தலைவரை சுட்ட மர்மநபர்கள்: அடுத்தடுத்து கட்சியினர் தாக்கப்படுவதால் பதற்றம்

செய்திப்பிரிவு

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி பிரஜ்பால் ரதியை, கிரேட்டர் நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத் நகரில் உள்ளூர் சமாஜ்வாதி தலைவர் கொல்லப்பட்டு 12 மணி நேரங்களுக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்துக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பிரஜ்பால் வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர் மற்றும் ஓட்டுநருடன் எஸ்யுவி காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தில்பட்டா செளக் அருகே அவர் வந்துகொண்டிருக்கும்போது மர்ம நபர்கள் அவரை நோக்கிச் சுட்டனர். இதில் அவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பிரஜ்பால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளார். போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவர்கள் பட்டியலில் பிரஜ்பால் இருந்தார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, பிரஜ்பாலுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள், எஸ்எஸ்பியைச் சந்தித்துப் பேசியுள்ளனர். முன்னதாக நேற்று காலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் லால்ஜி யாதவ் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 3 பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக காஸிபூரில் சமாஜ்வாதி தலைவர்கள் விஜய் யாதவ், கம்லேஷ் பால்மீகி ஆகியோரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT