இந்தியா

தனித்துப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி; இதற்கு மேல் பேச விரும்பவில்லை: அகிலேஷ் யாதவ்

செய்திப்பிரிவு

பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்து விட்டால் அதனை வரவேற்கிறோம், இதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள்  மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.  இதில், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வென்றது. 62 தொகுதிகளை ஆளும் பாஜக கைப்பற்றியது.

உத்தரப் பிரதேசத்தில் எம்எல்ஏக்களாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த 9 பேர் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோலவே சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வாகியுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள 11 காலியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் இடைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் ‘‘மாயாவதியின் கருத்து பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. தனித்து போட்டியிடுவது என மாயாவதி முடிவெடுத்து விட்டால் அதனை வரவேற்கிறோம்.

இதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேசி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திட்டமிடுவோம்’’ எனக் கூறினார்.  

SCROLL FOR NEXT