இந்தியா

கேரளாவில் நிபா வைரஸ்: கல்லூரி மாணவருக்கு தீவிர சிகிச்சை; கண்காணிப்பில் 311 பேர் - அமைச்சர் சைலஜா தகவல்

பிடிஐ

கேரளாவில் நிபா வைரஸால் தாக்குதல் கண்டறியப்பட்ட கல்லூரி மாணவர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 311 பேர் கண்காணிப்பிலும், 5 பேர் தனி வார்டுகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக கேரள சுதாகாரத்துறை அமைச்சர்  கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார்.

டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களின் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. மலேசிய நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நிபா  வைரஸ் அங்கிருந்து கேரளா வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த ஆண்டு  கோழிக்கோடு மாவட்டம், சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் லினியும் பலியானார். அதன்பின் கேரள அரசின் தீவிரமான நடவடிக்கை, மருத்துவர்களின் சிகிச்சை ஆகியவற்றால் நிபா வைரஸ் கட்டுக்குள் வந்தது.

கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலால் கோழிக்கோட்டில் 14 பேரும், மலப்புரத்தில் 3 பேரும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை ஆய்வு செய்ததில்  நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கி இருந்த 5 பேருக்கும்  காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால், அவர்களும் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் 2 பேர் உட்பட 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களது ரத்த மாதிரியும் புனே சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கொச்சியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நிபா காய்ச்சல் அறிகுறியால் இதுவரை 311 பேர் பல்வேறு மாவட்ட மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கக்பட்டுள்ளனர்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கல்லூரி மாணவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலையில் மெதுவாகவே முன்னேற்றம் இருக்கிறது. இந்தக் கல்லூரி மாணவரின் நண்பர்கள் 5 பேர் தனி வார்டுகளில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த 5 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த 5 பேரும் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தாலும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் ரத்த மாதிரி முடிவுகள் நிபா வைரஸ் தாக்குதல் இருப்பதாகவே வர வாய்ப்புள்ளது.

ஆனால், நிபா வைரஸுக்கு எதிரான சிகிச்சை, ரத்த மாதிரி சோதனைகள் வந்த பின்புதான் அளிக்க முடியும். சோதனை முடிவுகள் வியாழக்கிழமைதான் கிடைக்கும்  என்று தெரிகிறது. அதுவரை கண்காணிப்பில் இருக்கும் இவர்கள் 5 பேரையும் தீவிரமான சிகிச்சைக்கு உட்படுத்தி, கண்காணிக்க வேண்டும். கடுமையான காய்ச்சலும், தொண்டை அழறச்சியும் இருந்து வருகிறது. இவர்கள் குறைந்தபட்சம் 4 முதல் 14 நாட்கள் வரை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதாரா நிறுவனத்தின் அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஊடகங்கள் மூலம் அரசு பிரச்சாரம் செய்து வருகிறது''.

இவ்வாறு அமைச்சர் சைலஜா தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, நிலையைக் கேட்டறிந்துள்ளார்.

மேலும், மத்திய அரசு சார்பில் நிபா வைரஸ் குறித்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 011-23978046 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நிபா வைரஸ் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள், புகார்கள், சிகிச்சை முறையை அறியலாம்.

SCROLL FOR NEXT