இந்தியா

நிதி ஆயோக் கூட்டம்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை

செய்திப்பிரிவு

நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தினர்.

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இதில் காங்கிரஸைச் சேர்ந்த மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் உடல்நிலை பாதிப்பால் இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக்கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் பிரச்சினை, விவசாயக் கடன், குடிநீர் தட்டுப்பாடு, உணவு தானியங்கள் கையிருப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT