மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி எம்.பி.யுமான ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சாஹல்பூர் என்ற இடத்தில் போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி அவரை கைது செய்துள்ளனர். குற்றவாளி வாசிமுக்கு புல்லட் காயம் ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸின் கோட்டையாக எனக் கூறப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் மூன்று முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தியை, இந்தத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி வீழ்த்தினார். 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் தோல்வியைத் தழுவினார். 1977-க்குப் பின் முதன்முறையாக காங்கிரஸ் அமேதியை நழுவவிட்டது.
அதே வேளையில், அமேதியில் ஸ்மிருதியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்த சுரேந்திர சிங் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.
அமேதியில் உள்ள பராலியா கிராமத்தில் சுரேந்திர சிங் வீட்டுக்கு வெளியே திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர்.
குண்டு அடிபட்ட சுரேந்திர சிங், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தனது உதவியாளரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிருதி அவரே தனது தோளில் சவம் கிடத்தப்பட்டிருந்த பாடையைச் சுமந்து சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ராமச்சந்திரா, தர்மநாத், நசீம், கோலு ஆகியோர் கைதாகினர்.
இந்நிலையில் முக்கிய நபரான வாசிமை போலீஸார் தேடி வந்த நிலையில். வெள்ளிக்கிழமை அவரை சாஹல்பூரில் சுட்டுப் பிடித்துள்ளனர். வாசிம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வாசிமுடன் சேர்த்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.