கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி அரசு நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மஜத, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. பாஜக, 25 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவு சுயேச்சை ஓரிடத்தில் வென்றார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டது. மாநிலத்தில் பாஜக-வும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருவதாக புகார் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கர்நாடகாவில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மே 29-ம் தேதி நடைபெற்றது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு தேர்தலில் மொத்தமுள்ள 1,221 வார்டுகளில் காஙகிரஸ் 509 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வெறும் 366 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளில் வென்றது. 160 வார்டுகளில் சுயேச்சைகளும், பிஎஸ்பி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும் வென்றன.
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில் ‘‘காங்கிரஸ் 42 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அப்படியானால் மக்களவைத் தேர்தலில் பாஜக எப்படி வென்று இருக்க முடியும்’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.