ஹைதராபாத் பாலாபூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. இந்த லட்டை ரூ. 9.50 லட்சத்திற்கு பக்தர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார்.
ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள் கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டன. இங்குள்ள பாலாபூர் பகுதியில் இம்முறை 60-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 60 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக் கப்பட்டது.
இந்த விநாயகர் சிலை செவ்வாய்க்கிழமை காலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ராட்சத கிரேன் உதவியால் ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த விநாயகர் சிலைக்கு 21 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. ரூ. 1,116-க்கு தொடங்கிய ஏலம், இறுதியில் ரூ. 9.50 லட்சத்திற்கு விற்பனையானது. இதை ஜெயேந்தர் ரெட்டி என்ற பக்தர் ஏலத்தில் எடுத்தார்.
கடந்த ஆண்டு லட்டு பிரசாதம் ரூ. 9.26 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.