இந்தியா

அப்துல் கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு முன்னாள் பாஜக எம்.பி.கடிதம்

ஏஎன்ஐ

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15-ஐ தேசிய மாணவர் தினமாக அனுசரிக்க வேண்டுமென முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆனந்த் பாஸ்கர் ரபோலு, மத்திய அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை நாடு முழுவதும் மாணவர் தினமாக அனுசரிக்க வேண்டுமென்பதை நான் முன்மொழிகிறேன். ஐநா தொடர்புடன், இந்த நாள் ஏற்கனவே உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15-ஐ தேசிய மாணவர் தினமாக அறிவிக்க தங்கள் விரைந்த உடனடி முயற்சிகளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். இத்தினத்தை அனைத்து மட்டங்களிலும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கொண்டாட தாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

’ஏவுகணை மனிதன்’ கனவு கண்டது போல, எங்கள் மாணவர்களிடம் ஒரு பொறியை பற்றவைக்க இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க தகுந்த காரணங்கள் உண்டு. இந்திய ஜனாதிபதியாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை தேர்ந்தெடுத்ததில் பாஜகவுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு நாட்டின் தலைநகரில் ஒரு முக்கியமான சாலைக்கு அவரது பெயரை சூட்டுவதன் மூலம் அவரை மத்திய அரசும் நினைவுகூர்ந்தது.

டாக்டர்ஏபிஜே அப்துல் கலாம் மறைந்த நாளிலிருந்து, பல பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் அக்டோபர் 15-ஐ தங்கள் சொந்த விருப்பத்திலேயே அனுசரித்து வருகின்றன.

முழு தேசமும் மற்ற உணர்வுபூர்வமான நிகழ்வுகளை, உதாரணமாக ஜூன் 21 உலக யோகோ தினமாகவும், ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினமாகவும்  கொண்டாடுவதைப்போல அப்துல் கலாம் பிறந்த தினமும் அதே பொறிபறக்கும் உற்சாகத்துடன் கடைபிடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு பாஜக முன்னாள் எம்பி ஆனந்த் பாஸ்கர் ரபோலு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கிற்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT