இந்தியா

வட்டியை மீண்டும் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

செய்திப்பிரிவு

வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து மத்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடந்த பிப்ரவரி மாதம் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை குறைக்கப்பட்டன.

இதையடுத்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 6.00 சதவீதமாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை நீடிப்பதாலும், இந்தியாவில் பணவீக்கம் அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க இருப்பதாலும், நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதக் குறைப்பை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

பணவீக்கம் உயரும்பட்சத்தில் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கைகளை எடுப்பது சவாலானதாக இருக்கும். எனவே பணவீக்க அழுத்தம் மற்றும் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்புக்கு முன்னால் எடுக்கப்படவிருக்கும் இந்த நடவடிக்கையானது இவ்வாண்டின் அடுத்த அரையாண்டை சமாளிக்க உதவும் என்று கருதப்பட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெப்போ 6.00 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை மற்ற வர்த்தக வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT