இந்தியா

மராத்தி மொழியைக் கற்பியுங்கள் இல்லையேல் நடவடிக்கை: சிபிஎஸ்இ, ஐபி பள்ளிகளுக்கு மகாராஷ்டிர முதல்வர் கடும் எச்சரிக்கை

ஷரத் வியாஸ்

மகாராஷ்டிராவில் வாழ்பவர்கள், கல்விகற்பவர்கள் மராத்தி மொழியைப் பின்பற்றுவது அவசியம், இது தொடர்பாக எந்த ஒரு போர்டும் தப்பித்து விட முடியாது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ மற்றும் பன்னாட்டுப் பாடத் திட்டப் பள்ளிகளுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிபிஎஸ்இ, மற்றும் பன்னாட்டு பாடத்திட்டம் கொண்டுள்ள ஐபி பள்ளிகள் ஆகியவை இது தொடர்பாக மாநில அரசின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றி பாடத்திட்டத்தில் மராத்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கவில்லையெனில் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று பட்னாவிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கப் பெற்று விதிமுறைகள் இன்னும்  வலுவாக அமலாக்கம் செய்யப்படும் என்கிறார் பட்னாவிஸ்.

சிவசேனா உறுப்பினர் நீலம் கோர்ஹே பன்னாட்டு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியதையடுத்து பட்னாவிஸ் இந்த கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார். இது தொடர்பாக முன்னணி மராத்தி மொழி அறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்த் மராத்தி மொழி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

பள்ளிகள் மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சரிவரக் கடைபிடிப்பதில்லை என்பதை முதல்வர் பட்னாவிஸ் ஏற்றுக் கொண்டார்.  “எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மராத்தி மொழியை கற்பிப்பதில் பள்ளிகள் சுணக்கம் காட்டி வருகின்றன. இதற்காக சட்டங்களை மாற்றி இன்னும் வலுவாக்கப்படும். ஏனெனில் சில பள்ளிகள் மராத்தி மொழியைப் புறக்கணிப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன” என்றார்.

இந்த விவாதத்தின் போது ஹேமந்த் பிரபாகர் தாக்லே, இது மராத்தி மொழி பற்றியது மட்டுமல்ல, மொழியையும் கடந்து பண்பாட்டு வளர்ச்சிக்கு மாநில அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார். அதாவது பரந்துபட்ட பண்பாடு அதன் அடித்தளத்தில்தான் மொழி நிற்கிறது, என்றார்.

SCROLL FOR NEXT