மேற்கு வங்க பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா மகனும், மத்தியப் பிரதேச எம்எல்ஏவுமான ஆகாஷ் விஜய்வர்க்கியா அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் தாக்கியதால் நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்க்கியா. இவரின் மகன் ஆகாஷ் விஜய்வர்க்கியா. மத்தியப் பிரதேசம் இந்தூர் தொகுதி எம்எல்ஏவாக ஆகாஷ் விஜய்வர்க்கியா இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்தூர் நகரில் பாழடைந்த வீடு, கட்டிடங்கள் இருக்கின்றன. இவை எந்தநேரமும் இடிந்து விழும், மக்களுக்கு ஆபத்தாக இருக்கும் என்பதால், அதை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து நேற்று இடிக்கும் பணியில் இறங்கினர். மக்களும் இதை இடிக்க ஆதரவு தெரிவித்தனர.
ஆனால், இதற்கு பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்க்கியா, அவரின் ஆதரவாளர்கள் அந்தக் கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மண் அள்ளும் இயந்திரம் வீட்டை இடிக்க முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆகாஷ் விஜய்வர்க்கியாவின் ஆதரவாளர்கள் வாகனத்தின் சாவியைப் பறித்துக்கொண்டனர்.
அதிகாரிகளுடன், ஆகாஷ் விஜய்வர்க்கியா கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கடையில் இருந்து கிரிக்கெட் பேட்டை எடுத்த வந்த ஆகாஷ் விஜய்வர்க்கியா, செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரியை காட்டுமிராண்டித்தனமாக அடித்தார். அப்பகுதியில் பாதுகாப்பில் இருந்த போலீஸார் இதைப் பார்த்து, அங்கு வந்து எம்எல்ஏ ஆகாஷ் வர்க்கியாவை அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றனர்.
மாநகராட்சி அதிகாரியை ஆகாஷ் வர்க்கியா தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்தச் சம்பவத்தைப் பார்த்த மாநகராட்சி அதிகாரிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய எம்எல்ஏ ஆகாஷைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தி எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்க்கியா உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் 10 பேரைக் கைது செய்தனர்.
அதன்பின் ஆகாஷ் விஜய்வர்க்கியா உள்ளிட்ட ஆதரவாளர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
உடனடியாக ஆகாஷ் வர்க்கியா சார்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, தாக்கியுள்ளதற்கு ஜாமீன் வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆகாஷ் விஜய்வர்க்கியா நிருபர்களிடம் கூறுகையில், "இதுதொடக்கம்தான். நாங்கள் விரைவில் அதிகாரிகளின் ஊழல்,குண்டர் மனப்பான்மை ஆகியவற்றை ஒழிப்போம். கெஞ்சிக்கேட்டுக் கொண்டிருந்தால், ஏதும் நடக்காது தாக்கினால்தான் அனைத்தும் நடக்கும்" எனத் தெரிவித்தார்.