உள்துறை அமைச்சகத்தின் பெயரை நற்சான்றிதழ் வழங்கும் அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யும்படி கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவை எடியூரப்பா கண்டித்துள்ளார்.
நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியும் 24 கேபினட் அமைச்சர்களும் 9 இணையமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக பிரியங்க் கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், "நமக்கு இன்று ஒரு புதிய உள்துறை அமைச்சர் கிடைத்திருக்கிறார். இந்த அமைச்சகத்துக்கு உள்துறை என்பதற்குப் பதிலாக நற்சான்றிதழ் வழங்கும் அமைச்சகம் எனப் பெயரிட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" எனப் பதிவிட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, பிரியங்க் கார்கே அடிப்படை ஆதாரமில்லாமல் முட்டாள்தனமாக பேசுகிறார். பிரியங்கால்தான் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 1 லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் எனக் கூறினார்.
பிரியங் கார்கே கர்நாடக மாநில சமூக நலத்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்ட சாத்வி பிரக்யா சிங் போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அமித் ஷா, அந்த முடிவை நியாயப்படுத்தியதோடு சாத்வி மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபணமாகவில்லை எனக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்பு படுத்தியே பிரியங் கார்கே உள்துறை அமைச்சகம் என்பதற்குப் பதிலாக நற்சான்றிதழ் தரும் அமைச்சகம் என பெயர் வைக்கலாம் என்று கிண்டலடித்துள்ளார்.