இந்தியா

‘முறைகேடுகள்’ தொடர்பாக யுபிஏ முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலை விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை

தேவேஷ் கே.பாண்டே

முன்னாள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதாவது, ரூ.70,000 கோடி பெறுமான 111 விமனாங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

விமானங்கள் குத்தகை மற்றும் லாபம் தரும் வழித்தடங்களை சரண்டர் செய்தது, ஏர் இந்தியா விமான பயண நேரங்கள் மாற்றம் ஆகியவற்றில் முறைகேடுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை நிதிமுறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரித்து வருகிறது.

மேலும் ஏர்பஸ் இந்தியா தலைவர் கிரன் ராவுக்கு எதிராக ஜாமீன் இல்லாத கைது வாரண்ட் பெறவும் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தை அணுகியது. இவர் பலமுறை சம்மன் அனுப்பியும் விசாரணைக் குழுமுன் ஆஜராகவில்லை.

2005-ல் முதலில் ஏர்பஸ் ஒப்பந்தம் 43 விமானங்களுக்காக போடப்பட்டது. இன்னொரு 68 விமானங்களை போயிங்கிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.  இந்த ஒப்பந்தங்கள் ரூ.70,000 கோடி பெறுமானது என்று கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை முன்னாள் விமானப்போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளின் வாக்குமூலங்களையும் சேகரித்து பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, தீபக் தால்வார் என்பவரை கைது செய்து விசாரணை செய்தது, தால்வார் அடிக்கடி பிரபுல் படேலுடன் தொடர்பில் இருந்ததாகவும் அமலாக்கத்துறை வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்மன் குறித்து பிரபுல் படேல் கூறும்போது,  “அமலாக்கத்துறையினருடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT