இந்தியா

நீட் தேர்வில் தேசிய அளவில் 56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி: ராஜஸ்தான் மாணவர் முதலிடம்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் 2019-ம் ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் 56.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேசிய அளவில் ராஜஸ்தான் மாணவர் நலின் கந்தேல்வால் முதலிடம் பெற்றுள்ளார்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் தாக்கியதால் தேர்வு 20-ம் தேதி நடந்தது.

தமிழகத்தில் 14 நகரங்களில் உள்ள 188 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி என 11 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தியது.

நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து  1 லட்சத்து 40 பேர் விண்ணப்பித்தனர்.  இதில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் (93 சதவீதம்) தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்த நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் எழுதிய தேர்வில் 4.45 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், 3.51 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும், மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால், முதல் 50 இடங்களுக்குள்ளான இடங்களில் மாணவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 7 மாணவிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளார்கள்.

முதல் 10 இடங்களில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாதுரி ரெட்டி என்ற மாணவி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் அதிகபட்சமான தேர்ச்சி விகிதத்தை டெல்லி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களில் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய ஒருபக்கம் போராட்டங்கள் நடந்தாலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பாராட்டுக்குரிய வகையில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 39.56 சதவீதம் தேர்ச்சி இருந்த நிலையில், இந்த ஆண்டு 48.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஓபிசி பிரிவில் அதிகபட்சமாக 3.75 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதைத் தொடர்ந்து 2.8 லட்சம் மாணவர்கள் பட்டியலிடப்படாத பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.சி பிரிவில் ஒரு லட்சம் மாணவர்களும், எஸ்டி பிரிவில் 35 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நீட் தேர்வில் 4 மாணவர்கள் நியாயமற்ற வகையில் சில நடைமுறைகளைக் கடைபிடித்து தேர்வு எழுதியதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவர்களின் முடிவுகள் மட்டும நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து இந்திய அளவிலான 15 சதவீத ஒதுக்கீட்டுக்கு மத்திய சுகாதாரத்துறை சார்பில் கலந்தாய்வு நடத்த்தும் இதுதொடர்பான விவரங்களை தேர்ச்சி பெற்றவர்கள், www.mcc.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT