பாஜகவில் கடந்த இரு நாட்களுக்கு முன் இணைந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 4 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி அந்த கட்சியைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் மனு அளித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம். ரமேஷ், கரிக்காபட்டி மோகன் ராவ், டி.ஜி. வெங்கடேஷ் ஆகியோர் கடந்த இரு நாட்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த 4 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் தெலுங்குதேசம் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மற்ற எம்.பி.க்கள் 5 பேர் நேற்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்துப் பேசினார்கள். இந்த 5 எம்.பி.க்களில் 3 பேர் மக்களவை எம்.பி.க்கள், 2 பேர் மாநிலங்களவை எம்.பி.க்கள்.
இந்த சந்திப்புக்குப்பின் தெலுங்குதேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " மாநிலங்களவைத் தலைவரைச் சந்தித்து, எங்கள் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தது சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி இருக்கிறோம். அவர்களின் இணைவை ஆய்வு செய்யவும் கோரியுள்ளோம். அவரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அதன்பின் சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி முறையிடுவோம் " எனத் தெரிவித்தார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் 5 எம்.பி.க்களும் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் சேர்ந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவையில் தெலுங்குதேசம் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டம் 10-வது பட்டியலின்படி இது சாத்தியம் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் உண்மையில், இரு அரசியல் கட்சிகளை இணைக்க வேண்டுமென்றால், அது அமைப்புரீதியாக நிர்வாகரீதியாக மட்டுமே இணைக்க முடியும் என்று அரசமைப்புச்சட்டத்தின் 10-வது பட்டியலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆதலால், பாஜகவுடன், தெலுங்கு தேசம் கட்சியை இணைக்க முடியாது, சாத்தியமில்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மாநிலங்களவையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் இருக்கிறார்கள், இதில் ஒருவருக்கு கூட இணைப்புக் கூட்டம் குறித்த எந்தவிதமான நோட்டீஸும் அளிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.