இந்தியா

இந்து பெண்களுக்கு லவ் ஜிகாத் குறித்த விழிப்புணர்வு தேவை: சிவ சேனை

செய்திப்பிரிவு

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சிவ சேனை கட்சி கூறியுள்ளது.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்கள், காதல் என்ற பெயரில் இந்து பெண்களின் மனதை மாற்றி, அவர்களைத் திருமணம் செய்து தங்களது மதத்திற்கு மாற்றுவதாக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் சமீப காலமாக குற்றம்சாட்டி வருகின்றன. அத்துடன், 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் எதிர்ப்புப் பிரச்சாரமும் நடத்தி வருகின்றனர்.

'லவ் ஜிகாத்' என்ற பெயரில் இந்து மதத்தினரிடையே பிரச்சாரம் நடத்துவது பிரிவினைவாதத்தை தூண்டும் செயல் என்று சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

'லவ் ஜிகாத்' என்ற வார்த்தையை பயன்படுத்தி மதவாதம் பரப்பப்படுவதால் அந்த வார்த்தையை முற்றிலுமாக பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்றும், இத்தகைய பிரச்சாரத்தை தொடங்கியதற்காக உத்தரப் பிரதேச பாஐக எம்.பி. சுவாமி ஆதித்யானந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், 'லவ் ஜிகாத்' பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவ சேனை கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது.

அதில், "உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் நடத்த திட்டமிட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா, சிமி, அல்-காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற நினைக்கின்றனர். அதன் ஒரு பகுதிதான் 'லவ் ஜிகாத்'. இந்த சதிதான் இந்தியா எங்கும் இப்போது நடந்த வருகிறது.

அதனால்தான் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இவை உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்ட்டில் அதிக அளவில் நடக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள இந்து மக்கள் கோபத்துடன் இருக்கின்றனர்.

இதனைத் தடுக்கவே பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர்கள், நமது வீட்டு பெண்களை காதல் என்ற பெயரில் முட்டாளாக்கி, பின்னர் பர்கா அணிந்து கொண்டிருக்கும் ஐந்தில் ஒரு பெண்களாக மாற்றிவிடுகின்றனர்" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT