இந்தியா

கார் மீது லாரி மோதல்: பாஜக பெண் எம்.பி. தப்பினார் - போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

பிஹாரின் முஸாபர்பூரில் பாஜக பெண் எம்.பி. வந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பிஹாரின் ஷியோகர் எம்.பி. ரமா தேவி. முஸாபர்பூரின் சாந்தினி சவுக் பகுதி அருகே தனது காரில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. எம்.பி.யின் பாதுகாவலர்கள் லாரி ஓட்டுநரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தன்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த விபத்து நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று எம்.பி. ரமா தேவி தெரிவித்துள்ளார். அவரின் கணவரும், முன்னாள் மாநில அமைச்சருமான பிரிஜ் பிஹாரி சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரை பாட்னா உயர் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்புக் கூறியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரமா தேவி மேல்முறையீடு செய்துள்ளார்.

“சமீபத்தில் பாட்னா விமான நிலையத்துக்கு சென்றபோது, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது தொடர்பாக அடை யாளம் தெரியாத 2 பேர் என்னை மிரட்டினர். கணவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் தான் இப்போது என்னையும் கொல்ல முயன்றுள்ளனர்” என்று ரமா தேவி கூறினார்.

SCROLL FOR NEXT