நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத் தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குநரை தொழிலதிபர் மோயின் அக்தர் குரேஷி கடந்த 15 மாதங்களில் 90 முறை சந்தித்துள்ளது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சந்தேகம் எழுந்துள்ளதால், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மோயின் அக்தர் குரேஷி மீதான வருமான வரி வழக்கின் உண்மை நிலை குறித்து அக்டோபர் 17-ம் தேதி அறிக்கை அளிப்பதாக உறுதி அளித்தார்.
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வரும் 27-ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால், நிலக்கரி உரிமம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட உள்ளது. 2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. லோதா ஓய்வுக்குப் பின் தத்து புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது தலைமையிலான அமர்வு நிலக்கரி ஊழல் விவகாரத்தையும் விசாரிக்கும் என்று தெரிகிறது.