டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு நேற்று மிக நீண்ட வெப்ப அலை வீசியது. தாங்க முடியாத அனல் காற்றில் சிக்கி மக்கள் தவித்தனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. டெல்லியில் நேற்று அதிகபட்சம் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதுபோலவே உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
பெரும்பாலான வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கடந்த 2 நாட்களாக உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக நீண்ட வெப்ப அலை நேற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரத்தில் மிக அதிகமான நேரம் நிலவிய வெப்ப அலையால் ஏராளமானோர் உடல் நலக்குறைவுக்கு ஆளாகியுளளனர்.
திங்களன்று 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவிய அன்று, 68 பேர் அடங்கிய குழு தமிழகத்தின் கோவை நகரில் இருந்து வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்கள் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் நேற்று முன்தினம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கடும் வெப்பம் காரணமாக ஜான்சி அருகே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 5 பேர் பலியாகினர்.