இந்தியா

மகாராஷ்டிராவில் 3 ஆண்டுகளில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை: சட்டப்பேரவையில் அரசு தகவல்

பிடிஐ

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், ரூ.19 ஆயிரம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இருந்து வருகிறார். தற்போது அங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.

சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில், " கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் 12 ஆயிரத்து 21 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த ஆண்டில் முதல் 3 மாதங்களில் மட்டும் 610 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.

தற்கொலை செய்து கொண்ட 12 ஆயிரத்து 21 விவசாயிகளில் 6,888 விவாசியிகள் இழப்பீடு பெற தகுதியானவர்கள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதில் 6,845 விவசாயிகளுக்கு இழப்பீடாக தலா ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் 3 மாதங்களில் 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதில் 192 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 96 பேர் விவசாயிகள் இல்லை. மீதமுள்ள 323 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது

இதுவரை விவசாயிகளுக்காக ரூ.19 ஆயிரம் கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.24 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 லட்சம் விவசாயிகளில் 43.32 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடி சென்று சேர்ந்துள்ளது.

ஒருவிவசாயி தற்கொலை செய்து கொண்டால் அவர் உண்மையிலேயே விவசாயிதானா என்பதை சட்டம் முடிவு செய்யும். ஒருவர் மாநிலத்தில் தற்கொலை செய்துகொண்டாலே அவர் விவசாயி என்று கருதப்படுகிறார். ஒருவேளை தற்கொலை செய்துகொண்டவர் உண்மையிலேயே விவசாயியாக இருந்தால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படும் " எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT