பாஜக வெற்றிபெற்றுள்ள 300 இடங்களால், முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்துவிட முடியாது என்று ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 'ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்'’ (ஏஐஎம்ஐஎம்) கட்சியைச் சேர்ந்த அசாதுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து நான்காவது முறையாக இத்தொகுதியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார் ஒவைசி.
இதற்கிடையே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, ''மோடியால் கோயிலுக்குச் சென்று வழிபட முடியும் என்றால், நம்மாலும் மசூதிகளுக்குச் செல்ல முடியும். மோடியால் ஒரு குகைக்குச் சென்று தியானத்தில் அமர முடியும் எனில், முஸ்லிம்களாகிய நாமும் மசூதிகளில் பெருமையுடன் பிரார்த்தனை செய்யமுடியும்.
நாடு முழுக்க 300-க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவது பெரிய விஷயமல்ல. ஏனெனில் இந்தியா, அரசியலமைப்பில் வாழ்கிறது. பாஜகவின் 300 இடங்களால், முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்துவிட முடியாது.
இந்தியச் சட்டமும் அரசியலமைப்பும் நமது மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமையை நமக்கு அளித்திருக்கிறது. நாட்டில் நாமும் சமமானவர்களே. நம்மை வாடகைக்குக் குடியிருப்பவர்களாக நடத்தக்கூடாது'' என்றார் ஒவைசி.