இந்தியா

இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், போஜ்புரி, டோஹ்ரி: பல மொழிகளில் பதவியேற்ற எம்.பி.க்கள்

செய்திப்பிரிவு

புதிய மக்களவையில் இன்று பதவியேற்று வரும் எம்.பி.க்கள் இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநில மொழிகளிலும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அமோக வெற்றி பெற்றுமத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையின் முதல்கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. முன்னதாக மக்களவை இடைக்கால தலைவர் வீரேந்திர குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து  வைத்தார்.

இதைத்தொடர்ந்து 17-வது மக்களவை இன்று காலை முறைப்படி தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் வரிசையாக பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய எம்.பி.க்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். மாநிலங்கள் வாரியாக எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். புதிய எம்.பி.க்கள் இந்தி, ஆங்கிலம் மட்டுமல்லாமல் மாநில மொழிகள், உள்ளூர் மொழிகளிலும் பதவியேற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அர்ஜூன் முண்டா, மஹேந்திர நாத் பாண்டே போன்றோர் இந்தியில் பதவி பிரமாணம் ஏற்றனர். அதேசமயம் ஹர்ஷ வர்த்தன், ஸ்ரீபத் யேசோ நாயக் போன்றோர் சமஸ்கிருதத்தில் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது பிரதமர்மோடி, மத்திய அமைச்ர் ராஜ்நாத் சிங் போன்றோர் அவரை பார்த்து புன்னகை செய்தனர்.

இதுபோலவே சிவசேனாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சாவந்த் மராத்தியிலும், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கிலும் பதவியேற்றுக் கொண்டனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அம்மாநில பாஜக எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.

பாஜக எம்.பி. கோபால் ஜி தாக்குர் போஜ்புரி மொழியிலும், காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் டோஹ்ரி மொழியிலும் பதவியேற்றார்.

சோம் பிரகாஷ் பஞ்சாபி மொழியிலும், ரமேஷ்ர் டெலி அசாம் மொழியிலும், சுரேஷ் அங்காடி ஆங்கிலத்திலும் பதவியேற்றனர்.

பிஹாரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜாவேத் ஆங்கிலத்தில் பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்.பி ராஜ்தீப் ராய் வங்க மொழியிலும், அசாம் எம்.பி கிரிபாநாத் மல்லா அசாமி மொழியிலும் பதவியேற்றனர்.   

இன்று பிற்பகலிலும்  நாளையும் புதிய எம்பிக்கள் தொடர்ந்து பதவியேற்கின்றனர்.

SCROLL FOR NEXT