தாம் வளர்க்கும் ஆட்டைத் தாக்கிக் கொல்ல முயன்றதாக உ.பி.யில் ஒரு பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். இது ஒரு வினோத வழக்காகக் கருதப்படுகிறது.
உ.பி.யின் மேற்குப் பகுதியில் உள்ள முசாபர் நகரின் தத்தாஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷஹனாஸ். இவர் நேற்று முன்தினம் தாம் வளர்க்கும் ஆட்டுடன் முசாபர்நகர் நகர காவல் நிலையம் வந்திருந்தார்.
இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் வியப்படைந்தனர். தனது கைகளில் மனுவுடன் வந்தவர், அதில் தன் ஆட்டை அவரது அண்டை வீட்டார் தாக்கிக் கொல்ல முயன்றதாக புகார் அளித்தார்.
இந்தப் புகாரில், கொல்லும் பொருட்டு தம் ஆட்டைக் கல்லால் அடித்ததால் அதன் கண்களில் காயம்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால், தனது ஆட்டிற்கு போலீஸார் மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முசாபர் நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான அக்ஷய் சர்மா கூறும்போது, ''வினோதமான இந்த வழக்கின் மீது விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் உண்மையானால் அப்புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.