இந்தியா

கேரள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பாலியல் வழக்கில் சிக்கினார்

பிடிஐ

கேரள மாநில ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையில் மதுபான பாரில் நடனமாடும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி பாலியல் உறவு வைத்து, குழந்தையும் உண்டாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் வினோதினி பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்த பெண் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், பிஹாரைச் சேர்ந்த அந்தப் பெண் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பினோய் பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

இது குறித்து பினோய் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்தப் பெண் எனக்கு ஒரு கடிதம் எழுதி, ரூ.5 கோடி கேட்டும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கூறியும் மிரட்டினார். ஆனால், எனக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்துவிட்டது.

அந்தப் பெண் என்னைப் பணம் கேட்டு மிரட்டுகிறார். இதுதொடர்பாக கடந்த மே மாதம் அந்தப் பெண்ணுக்கு எதிராக கண்ணூர் மண்டல போலீஸ் ஐஜியிடம் நான் புகார் அளித்தேன். கண்ணூர் போலீஸ் எஸ்.பி. ஷிவ் விக்ரமுக்கு அந்தப் புகார் மாற்றப்பட்டது. அந்த நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலும் அந்தப் பெண் சில ஆண்டுகளுக்கு முன் துபாயில் ஒரு மோசடியில் சிக்கி, விடுதலையானவர்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே மும்பையில் அந்தப் பெண் டான்ஸர் அளித்த புகாரின் அடிப்படையில் ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் பினோய் பாலகிருஷ்ணன் மீது ஐபிசி பிரிவு 420, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை ஓஷிவாரா காவல்நிலைய ஆய்வாளர் ஷைலேஷ் பசல்வாத் உறுதி செய்தார்.

அந்தப் பெண் டான்ஸர் அளித்த  புகாரில், "மும்பையில் ஒரு டான்ஸ் பாரில் நடனமாடிவந்த என்னைச் சந்தித்த பினோய் என்னிடம் நெருங்கிப் பழகினார். என்னை டான்ஸ் ஆடும் பணியை நிறுத்திவிடுமாறு கூறியதால், அவரின் பேச்சைக் கேட்டு வேலையை விட்டு மும்பை அந்தேரி பகுதியில் ஒரு வீடு எடுத்துத் தங்கினோம்.

அங்கு அடிக்கடி வந்த பினோய்க்கும் எனக்கும் உடல்ரீதியான உறவு ஏற்பட்டது. அதன் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதன்பின் கடந்த ஆண்டுதான் பினோய்க்கு திருமணம் நடந்துவிட்ட விவரம் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தேன்"  எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT