ஜார்கண்ட்டில் தப்ரேஸ் அன்சாரி என்ற 24 வயது முஸ்லிம் இளைஞரை கும்பல் ஒன்று கட்டிப் போட்டு அடித்து உதைத்து ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான் என்று கூறுமாறு வற்புத்தபட்டு கொல்லப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து ‘ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் எனக்கு வலியைத் தருகிறது’ என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ஆனால் அதற்காக ஜார்கண்ட் மாநிலத்தையே கும்பல் படுகொலைகளின் தலைமையிடம் என்று விமர்சிப்பது நியாயமற்றது என்றார்.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி இது தொடர்பாகக் கூறியதாவது:
ஜார்கண்ட் படுகொலை எனக்கு வலியைத் தருகிறது, மற்றவர்களுக்கும் துன்பத்தை அளித்தது. ஆனால் மாநிலங்களவையில் சிலர் ஜார்க்கண்டை கும்பல் படுகொலைகளின் மாநிலம் என்று விமர்சிக்கின்றனர். இது நியாயமா? ஏன் ஒரு மாநிலத்தையே புண்படுத்த வேண்டும். ஜார்கண்ட் என்ற மாநிலத்தை இன்சல்ட் செய்ய நம்மில் யாருக்கும் உரிமையில்லை.
ஜார்கண்டாக இருக்கட்டும், மேற்கு வங்கமாக இருக்கட்டும் அல்லது கேரளாவாக இருக்கட்டும் வன்முறைச் சம்பவங்களை சமமாக கண்டிக்க வேண்டும். எங்கு நடந்தாலும் வன்முறை செய்பவர்களை, தூண்டுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார் மோடி.
ஜூன் 18ம் தேதி தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லிம் இளைஞரை பைக் திருட்டு சந்தேகத்தின் பேரில் கும்பல் ஒன்று கட்டிப் போட்டு அடித்து உதைத்தது, அவர் எவ்வளவு கெஞ்சியும், தனக்கும் அந்தத் திருட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கூறியும் அவரை அடித்து உதைத்தனர், மேலும் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் என்று கூறவும் என்று அந்த முஸ்லிம் இளைஞரை சித்தரவதை செய்துள்ளனர். போலீஸ் அவரை மீட்டனர், ஆனால் மறுநாள் காயத்தினால் அவர் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் இன்று மக்களவையில் குலாம் நபி ஆசாத், ஆர்ஜேடி உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, ஆகியோர் இந்த விவகாரத்தை எழுப்பினர்.