இந்தியா

ஜெய் ஸ்ரீராம் சொல்லி குற்றம் செய்வது ட்ரெண்டாகி விட்டது: குஷ்புவுக்கு காயத்ரி ரகுராம் பதில்

செய்திப்பிரிவு

இதுதான் புதிய இந்தியாவா? என்ற குஷ்புவின் கேள்விக்கு, ஜெய் ஸ்ரீராம் சொல்லி குற்றம் செய்வது ட்ரெண்டாகி விட்டது எனப் பதிலளித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

ஜார்க்கண்ட் மாநிலம், சரைய்கேலாகார்சவன் மாவட்டத்தைச் சேர்ந்த தப்ரீஸ் எனும் 22 வயது இளைஞரை ஒரு கும்பல் பைக் திருடியதாக கடந்த வாரம் கொடூரமாகத் தாக்கியது. அவரைத் தாக்கும்போது, ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்று கூறுமாறு அந்தக் கும்பல் கட்டாயப்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்து இளைஞர் தப்ரீஸை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சிகிக்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் தப்ரீஸ் உயிரிழந்தார். அவர் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்து. இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. “ஒருவர் மாட்டுக்கறி கொண்டு சென்றார் என்று சந்தேகப்பட்டு, மதத்தின் பெயரால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்னொருவர், கட்டிவைத்துக் கொல்லப்பட்டார். மறுபடியும் ஒருவர் மதத்தின் பெயரால், ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல் இருந்ததால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுக் கொல்லப்பட்டார். ஒரு மனிதரைக் கொல்ல எப்போதிருந்து மதம் காரணமானது? புதிய இந்தியாவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.

அதை ரீட்வீட் செய்துள்ள காயத்ரி ரகுராம், “இந்துக்கள் கொலைகாரர்கள் என்கிறீர்களா அல்லது கூட்டமாகச் செல்பவர்கள் எல்லாம் கொலைகாரர்களா? மதத்துக்கு இப்படியான செயல்களில் பங்கில்லை.

கொலை செய்தல், குற்றமிழைத்தல், அப்பாவி மற்றும் ஏழைகளிடம் இருந்து திருடுதல் ஆகியவை, அடுத்தவர்களைக் கொடுமைப்படுத்திப் பார்க்கும் மனநிலை. ஜெய் ஸ்ரீராம் சொல்லி வெறுப்பேற்றுவது அல்லது குற்றம் செய்வது என்பது ட்ரெண்டாகி விட்டது. ஒழுங்கீன கும்பல்கள், தாங்கள் தப்பிக்க அதைப் பயன்படுத்துகின்றன” என அதற்குப் பதில் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT