நாட்டில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.84 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பணியாளர் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
கடந்த 2018, மார்ச் 1-ம் தேதி வரை 38.02 லட்சம் காலியிடங்களில், 31.18 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 6.84 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஊழியர்கள் ஓய்வு பெறுதல், திடீரென மரணமடைதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் அந்தந்த அமைச்சகங்கள், துறைகள் மூலம் நிரப்பப்படும். ஆண்டுமுழுவதும் அமைச்சகங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது தொடர்ச்சியான செயல்பாடு. அது விதிமுறைப்படி நடந்து வருகிறது.
பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 266 காலிப்பணியிடங்கள் 2019 மற்றும் 2020ம் ஆண்டில் நிரப்பட இருக்கின்றன.
ரயில்வே வாரியமும், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 138 காலியிடங்களை நிரப்ப 5 முறை வேலைவாய்ப்புதறை மூலம் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.