மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள போபால் பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகுர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உட்பட 7 பேர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாரம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
போபால் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு நாடாளுமன்ற பணிகள் உள்ளதால் இந்த வாரம் ஆஜராக விலக்கு அளிக்குமாறு பிரக்யா சிங் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
பிரக்யா சிங்குக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதால் அவரால் மும்பை வரமுடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். நேற்று மட்டும் விலக்கு அளிப்பதாக கூறிய நீதிபதி, இன்று (வெள்ளிக்கிழமை) பிரக்யா சிங் ஆஜராக வேண்டும் என்றும் தவறினால் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் பிரக்யா சிங் இன்று மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி இந்த வழக்கில் அரசு தரப்பில் எத்தனை சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் உங்களுக்கு தெரியுமா? இதுபற்றி உங்கள் வழக்கறிஞர் கூறியிருக்கிறாரா என கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கு ஏதும் தெரியாது என சாத்வி பிரக்யா சிங் தெரிவித்தார்.
பின்னர் மாலேகானில் குண்டு வைத்தது யார் என்ற கேள்வியை நான் எழுப்பவில்லை, அதேசமயம் 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடந்தது உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டார். அதற்கும், பிரக்யா சிங் தனக்கு ஏதும் தெரியாது எனக்கூறினார்.