இந்தியா

மேற்கு வங்கத்தில் மத்திய அரசும், பாஜகவும் வன்முறையைத் தூண்டுகிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு மத்திய அரசும், பாஜகவும் வன்முறையைத் தூண்டிவிடுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

தேர்தலில் இருந்தே இருகட்சித் தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பாஜக தொண்டர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள் கட்சித் தொண்டர்கள் 3 பேரை பாஜகவினர் கத்தியால் குத்திக் கொன்றதாக மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேற்கு வங்க அரசுக்கு விளக்கக் கடிதம் அனுப்பட்டது. அதில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மேற்கு வங்க அரசு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘வேறு எந்த மாநிலத்தில் வன்முறை, கலவரம் நடந்தாலும் மத்திய அரசு தனது வாலை சுருட்டி வைத்துக் கொள்கிறது. அதேசமயம் மேற்கு வங்கத்தில் ஏதேனும் சில மோதல்கள் நடந்தாலே மத்திய அரசு பாய்கிறது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து வரும் மோதல்கள் திட்டமிட்ட வன்முறை விளையாட்டு. எனது வாயை அடைக்க வேண்டும் என்பது தான் அவர்களது இலக்கு. ஏனென்றால் நாடு முழுவதும் அவர்களை முழுக்க முழுக்க எதிர்க்கும் ஒரே நபராக நான் தான் இருக்கிறேன்.

இதனை மத்திய அரசாலும், பாஜகாவாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் விளக்கம் கேட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுபற்றி நான் ஏதும் கூறவில்லை. இதற்கு மேற்கு வங்க தலைமைச் செயலாளர் ஏற்கெனவே பதில் அனுப்பி விட்டார்’’ என்றார்.

SCROLL FOR NEXT