இந்தியா

விபரீதமான சாகசம்: பிரபல மேஜிக் நிபுணர் கொல்கத்தாவில் பலி

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேஜிக் நிபுணரான சன்சல் லகிரி நீருக்கடியில் சாகசம் நிகழ்த்தும்போது எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதி சோனார்பூரைச் சேர்ந்தவர் சன்சல் லகிரி (42). இவர் ‘ஜாதுகர் மாந்த்ரேக்’ என்ற பெயரில் மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். கடந்த 20-ம் நூற்றாண்டின் பிரபல அமெரிக்க மேஜிக் நிபுணர் ஹாரி ஹூடினியின் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றை லகிரி முயற்சி செய்து வந்தார்.

கை, கால்கள் கட்டப்பட்டு நீருக்குள் தள்ளப்படும் ஹாரி ஹூடினி, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெற்றிகரமாக கரைக்குத் திரும்புவார். அதுபோன்ற சாகசத்தை கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றில் லகிரி ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்த முயன்றார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள  ஹூக்ளி நதியில் வழக்கம் போல சங்கிலியால் உடலை பூட்டு போட்டுக் கட்டி கொண்டு சிவப்பு - மஞ்சள் ஆடையில் ஆற்றில் இறக்கப்பட்டார். அந்தக் காட்சியை ஆற்றின் பாலத்திலும் கரையிலும் ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் லகிரி கட்டுகளை அவிழ்த்துக்கொண்டு கரை திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வெகு நேரமாகியும் லகிரி கரை திரும்ப வில்லை. இதனைத் தொட்ரந்து மீட்புப் படையினர் விரைந்து வந்து லகிரியைத் தேடும் பணியில் இறங்கினர்.

நீண்ட நேரமாகி லகிரியைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், பெரும் போராட்டத்துக்கிடையே இறந்த நிலையில் அவரது உடல் திங்கட்கிழமை பின்னிரவில் கண்டெடுக்கப்பட்டது.

இதனை கொல்கத்தா துணை கமிஷ்னர் சையத் வாகர் ராசா உறுதிப்படுத்தியுள்ளார்.

லகிரி இந்த சாகசத்தை செய்வதற்கு முன்னதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம், ”நான் இதற்கு முன்னர் இதே மாதிரியான சாகத்தை 21 ஆண்டுகளுக்கு முன்னர் செய்திருக்கிறேன். நான் கண்ணாடிப் பெட்டியில் மூடப்பட்டு ஹவுரா பாலத்தில் இறக்கப்பட்டேன். பின்னர் அதிலிருந்து 29 நொடியில் வெற்றிகரமாக வெளியே வந்தேன். ஆனால் இந்த முறை இது எனக்கு கடுமையாக இருக்கப் போகிறது.

நான் சங்கிலியை பிரித்துக் கொண்டு வந்துவிட்டேன் என்றால் அது மேஜிக். இல்லை என்றால் அது ட்ராஜிக்” என்று தெரிவித்தார்.

சன்சல் லகிரியின் இந்த மரணம் மேஜிக் நிபுணர்களிடமும், கொல்கத்தா வாசிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT