பிரதிநிதித்துவப் படம்
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடந்த 2017-ல் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவி ஏற்றது முதல் சட்டம் ஒழுங்கில், 'பூஜ்ஜிய சகிப்புத் தன்மை' கொள்கையை கடைபிடித்து வருகிறார்.
இதனால், யோகி அரசு கடந்த 9 ஆண்டுகளில் மாநிலத்திலுள்ள குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இக்காலகட்டத்தில், 34,253 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வராக யோகி பதவி ஏற்றது முதல் இன்று வரை உபி காவல்துறை மொத்தம் 17,043 என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளது. இதில் 289 பிரபல ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 11,834 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர். இதன் மூலம், உ.பி.யில் சராசரியாக தினமும் ஐந்து என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேசமயம், என்கவுன்ட்டர்களின்போது காவல் துறையினரில் 18 பேர் வீரமரணம் அடைந்துள்ளதுடன், 1,852 பேர் காயமடைந்துள்ளனர். அதிகபட்ச எண்ணிக்கையிலான என்கவுன்ட்டர்கள் மீரட் மண்டலத்தில் பதிவாகியுள்ளன.
மீரட் மண்டலக் காவல் துறை 4,813 என்கவுன்ட்டர்களை குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ளது. இதில் 8,921 பேர் கைது செய்யப்பட்டதுடன் 3,513 பேர் காயமடைந்தனர். மேலும், தலைமறைவாக இருந்த 97 பிரபல குற்றவாளிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் துறையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர்.
இரண்டாவது நிலையில், வாராணசி மண்டலத்தில் 1,292 என்கவுன்ட்டர்கள் பதிவாகியுள்ளன. இதில் 2,426 குற்றவாளிகள் கைதாகி, 29 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். ஆக்ரா மண்டலம் என்கவுன்ட்டர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு நடைபெற்ற 2,494 என்கவுன்ட்டர்களில் 5,845 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 24 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர்.
பரேலி மண்டலத்தின் 2,222 என்கவுன்ட்டர்களில் 21 பிரபல குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகரான லக்னோ மண்டலத்தின் 971 என்கவுன்ட்டர்களில் 20 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஜியாபாத் மண்டலத்தில் 789 என்கவுன்ட்டர்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். கான்பூர் மண்டலத்தில் 791 என்கவுன்ட்டர்களில் 12 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த என்கவுன்ட்டர்கள், உ.பி.யில் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தையும், பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனாலேயே மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை தேசிய அளவிலும் பாராட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
2 தமிழ் ஐபிஎஸ் அதிகாரிகள்...
உ.பி.யின் புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் எஸ்பியாக இருந்த தமிழரான ஜி.முனிராஜ், முதல் என்கவுன்ட்டரைத் தொடங்கி வைத்திருந்தார். இதற்காகவே ‘உ.பி சிங்கம்’ என அழைக்கப்பட்டவர் தற்போது முராதாபாத் மண்டல டிஐஜியாக உள்ளார். பிறகு, காஜியாபாத் எஸ்எஸ்பியாக பணியாற்றியபோதும் முனிராஜ், பல என்கவுன்ட்டர்களை நடத்தி இருந்தார்.
ஜி.முனிராஜ் | பி.தினேஷ்குமார்
இவரைப் போலவே மற்றொரு தமிழரான பி.தினேஷ்குமார் ஐபிஎஸ் அதிகாரியும் பல என்கவுன்ட்டர்களை நடத்தி இருந்தார். இவர், கான்பூர் எஸ்எஸ்பியாக இருந்தபோது விகாஸ் துபே எனும் பிரபலக் குற்றவாளி தன்னைக் கைது செய்ய வந்த போலீஸார் படையில் 8 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் விகாஸ் துபேவை தினேஷ் குமார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றார்.
இதற்கு முன்பாக ஷாம்லியின் எஸ்.பியாக இருந்த தினேஷ்குமார், காலிஸ்தான் தீவிரவாதிகள் மூவரை உயிருடன் கைது செய்திருந்தார். இதுபோன்ற வீர தீர செயல்களுக்காக தமிழர்களான ஜி.முனிராஜ் மற்றும் பி.தினேஷ்குமாருக்கு குடியரசு தலைவர் விருதுகளை வழங்கி உ.பி அரசு கவுரவித்தது.