2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் பார்க் தெருவில் ஓடும் காரில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது அனைத்துப் பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவுக்கு கண்டனங்களை ஈர்த்தது.
இவர் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் உணவு விடுதி மற்றும் மதுபான அருந்தகமான ரெஸ்டாரண்டிற்குள் செல்ல முயன்ற போது வாசலில் நின்று கொண்டிருந்த பவுன்சர் அவரை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார்.
இது பற்றி அந்தப் பெண் கூறியதாவது: “ரெஸ்டாரண்ட் வாசலில் நின்று கொண்டிருந்த பவுன்சர் என்னை உள்ளே விட அனுமதி மறுத்தார். பிறகு விடுதி மேலாளரை அழைத்தார். மேலாளர் என்னிடம் கூறியதுதான் எனக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது, அதாவது நான் பார்க் தெருவில் நடந்த பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்டவள் எனவே உள்ளே விட மாட்டோம் என்றார். எனது நண்பர் முன்னால் என்னைக் கூச்சமடையச் செய்ய வைத்த இழிவு ஆகும். மேலும் பலரும் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அனைவரது முன்னிலையிலும் அவர் என்னை ரேப் விக்டிம் என்று அவமானப் படுத்தினார்.
பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட நான் ஏன் இப்படி அவமானப்படவேண்டும்?” என்று கொதித்துப் போனார் அவர்.
மேலும் சில பத்திரிகையாளர்களும் அந்த விடுதி முன் வந்து மேலாளரிடம் சரமாரிக் கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் அவர்களிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார் அந்த மேலாளர் என்று அந்தப் பெண்மணி மேலும் கூறினார்.
செய்தி சானல் ஒன்று இதுபற்றி அந்த விடுதி மேலாளர் திப்டன் பேனர்ஜியிடம், கேட்டதற்கு, அந்தப் பெண்ணை உள்ளே அனுமதித்தால் அவரால் பிரச்சினைகளே அதிகமாகும். அவர் இங்கு அடிக்கடி வருவார், வேறு வேறு நபர்களுடன் வருவார், குடித்து விட்டு பாரை அதகளப்படுத்துவார், அதற்கான வீடியோ பதிவும் எங்களிடம் உள்ளது. இதனால்தான் அனுமதி மறுத்தேன்”என்றார்.
மேலாளரின் இந்தக் கருத்தை அவதூறு என்று கூறிய அந்தப் பெண், நான் அடிக்கடியெல்லாம் வருவதில்லை, பல மாதங்களுக்கு முன்பு ஒருமுறை வந்தேன். ஆனால் என்னைப்பற்றி கதைகளை அவர் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
ஆனால் இதுபற்றி அப்பகுதி போலீஸ் அதிகாரி எந்த விதக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அந்தப் பெண்ணிற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது பற்றியும் அந்த அதிகாரி வாயைத் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது.