சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.
இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்துப் பார்க்கவில்லை. இந்நிலையில், நான் கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.