பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு பொறுப்பேற்று நூறு நாட்களுக்கு மேலாகியும், மத்திய அமைச்சர்கள் பலர், தங்களுக்கான உதவியாளரை நியமிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்றதும், மத்திய அமைச்சர்கள் தங்களின் உதவியாளர்களை தேர்ந் தெடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். குறிப்பாக அமைச் சர்கள் தேர்ந்தெடுக்கும் உதவி யாளர்கள் முந்தைய அரசின் அமைச்சர்களிடம் பணியாற்றியவர் களாகவும், அவர்களின் உறவினர் களாகவும் இருக்கக் கூடாது என கூறியிருந்தார்.
இதனிடையே, உதவியாளர் களின் பணி அமர்வை அங்கீகரிப் பதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமைக்கப்பட்டு, பெயரளவில் செயல்பட்டு வந்த அதிகாரிகள் நியமன ஆலோசனைக் குழுவிற்கு மோடி முழு அதிகாரம் அளித்தார்.
தற்போது அமைச்சர்கள் பரிந்துரைக்கும் உதவியாளர்கள் சிலரை இந்த குழுவினர் நிராகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சக வட்டார அதிகாரிகள் கூறும்போது, “தங்களின் நம்பிக்கைக்குரிய தகுதி யான நபர்களை அப்பதவிக்கு தேர்ந் தெடுக்க அமைச்சர்கள் விரும்பு கின்றனர். ஆனால், அமைச்சர்கள் பரிந்துரைக்கும் சில தனி உதவி யாளர்களை, அவர்கள் மீது இருக் கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிகாரிகள் நியமன ஆலோசனை குழுவினர் வேண்டுமென்றே நிரா கரித்து விடுகின்றனர்” என்றனர்.
45 அமைச்சர்களில் பலர் தங் களின் உதவியாளர்களை நியமிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
குறிப்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, பழங்குடியினர் துறை அமைச்சர் ஜுயல் ஒரம், பொது நிறுவனங்கள் மற்றும் கனரக தொழிற்சாலை துறை அமைச்சரான ஆனந்த் கீதே, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அனந்த்குமார், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஏ.ஹெப்துல்லா ஆகியோர் தங்களுக்கான உதவி யாளரை நியமிக்காமல் உள்ளனர்.
இணை அமைச்சர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல இணை அமைச்சர்களும் தங்களுக்கான உதவியாளர்களை நியமிக்காமல் உள்ளனர்.
பொன். ராதாகிருஷ்ணனிடம் கடந்த அரசின் அமைச்சர்களிடம் பணியாற்றிய சிங்காரவேலர் எனும் அதிகாரி தற்காலிகமாக உதவியாளர் பணியை மேற்கொண்டு வருகிறார்.
நிஹால் சந்த், சஞ்சீவ்குமார் பல்யான், மன்சுக்பாய் வாஸவா, தாதாராவ் தான்வே, விஷ்ணு தியோ சாய், சுதர்ஷன் பகத் ஆகிய இணை அமைச்சர்களும் தனி உதவியாளர்களை நியமிக்கவில்லை.
விரைவில் நியமனம்
தற்போது மத்திய அமைச்சர்கள் 15 பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனி உதவியாளரை நியமிக்கலாம். மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நாடாளுமன்ற விவகாரம், நகர்ப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகிய மூன்று துறைகளுக்கும் தனித்தனியே 3 உதவியாளர்களை நியமித்துள்ளார். ஆனால், பெரும்பாலான மற்ற அமைச்சர்கள் அவ்வாறு தனி உதவியாளர்களை நியமிக்கவில்லை.
இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் அமைச்சக வட்டாரம் கூறியதாவது: “விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவுள்ளது. தற்போது ஒரு அமைச்சரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு, அமைச்சர்கள் தங்களுக்கான உதவியாளர்களை நியமிப்பார்கள்” என்றனர்.