இந்தியா

சீனாவுக்கு ஈடு கொடுக்கும் மோடி: முன்னாள் வெளியுறவு செயலாளர் கருத்து

ஆர்.ஷபிமுன்னா

பிரதமராகப் பதவி ஏற்ற நூறு நாட்களுக்குள் நரேந்திர மோடி சீனாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வெளியுறவு கொள்கைகளை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலைக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென் ‘ தி இந்து‘விடம் கூறியதாவது:

‘தனது வெளியுறவு அரசியல் சார்ந்த செயல்பாடுகளை மோடி தனது பதவி ஏற்பு விழாவிற்கு முன்பாகவே தொடங்கி விட்டார். பதவியேற்பு விழாவில் நம்மை எதிரியாகக் கருதும் பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு விடுத்த அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவின் நட்பு நாடுகளுக்கும் மோடி அழைப்பு விடுத்ததால், அவர் மீது அந்நாடுகளுக்கு ஈர்ப்பு வந்துள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்தது, அதன்மீது எழுந்த எதிர்ப்பை சமாளித்த விதம், பிரதமரின் பதவி ஏற்புக்கு முதன்முறையாக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது ஆகியவை மோடியின் சிறந்த வெளியுறவு அரசியலுக்கு உதாரணங்கள்.

இதன் நோக்கம் பிரதமர் பதவியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதாக இருக்க லாம். இவர்களது வருகையை பிரதமர் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என எண்ணுகிறேன். அவர் தனது முதல் விஜயமாக பூடான் மற்றும் நேபாளத்திற்கு சென்று வந்தது முக்கிய உதாரணம்.

இந்த இரு நாடுகளிலும் சீனா, பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. இவை முழுமை பெறுவதற்கு முன்பாக மோடி அந்த இருநாடுகளுக்கும் சென்று அந்நாடுகள் மீது இந்தியாவுக்கு இருக்கும் வலிமையான நட்புணர்வை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இது இந்தியாவுக்கு அண்டை நாடுகளுடனான செல்வாக்கை வளர்த்துக் கொள்ள அதிகப் பயனுள்ளதாக இருக்கும்.

இதே வகையிலான உறவு இலங்கையுடனும் மோடி வளர்த்துவது அவசியம். ஆனால், ஈழத் தமிழர்கள் பிரச்சினையை மனதில் கொண்டு தனது விஜயத்தை தாமதப்படுத்துகிறார் என எண்ணுகிறேன்.

இலங்கையுடனான உறவு என்பது மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். அதேசமயம், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்துடன் இலங்கைக்கு உள்ள தனிப்பட்ட உறவுகளையும் மோடி கருத்தில் கொண்டிருக்கிறார் எனக் கருதுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை சம உரிமையுடன் இலங்கை நடத்த வேண்டும் என்பதை, உலகநாடுகளின் பிரச்சினையாகக் கொண்டு செல்ல மோடி நினைப்பதாக கருதுகிறேன். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மோடி நிரந்தர தீர்வு காண வேண்டும்.

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர மோடிக்கு வேறு வழியில்லை. ஏனெனில், இந்தியாவின் மூன்றா வது பெரிய அண்டைநாடாக பாகிஸ்தான் உள்ளது.

ஜனநாயக நாடாகவும், உலகின் மூன்றாவது பணக்கார நாடாகவும் திகழும் ஜப்பானின் உறவு இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானதாகும். தனது நிர்வாகத்தில் இருக்கும் தீவான சென்காகு மீது சீனாவுடன் இருக்கும் உரிமை பிரச்சினையால் அதனுடன் ஜப்பான் மிகவும் கோபமாக இருக்கிறது. இந்தத் தருணத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட மோடி, ஜப்பான் சென்றுள்ளதற்கு பலத்த வர வேற்பு கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.

ஜப்பானுடன் மோடி செய்துள்ள தொழில் ஒப்பந்தங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. ஏனெனில், ஜப்பான் சுமார் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.78.79 லட்சம் கோடி) அளவுக்கு பங்கு ஒப்பந்தங்களை வெளிநாடுகளுடன் மேற்கொ ண்டுள்ளது.

இந்த மாதத்தில் நடைபெறவுள்ள, சீனப் பிரதமரின் இந்திய சுற்றுப் பயணம் மற்றும் மோடியின் அமெரிக்கப் பயணம் ஆகியவை மிக முக்கியமானவை. இவ்விரு நிகழ்ச்சியிலும் உலக நாடுகளின் பார்வை முழுக்க நம் இந்திய பிரதமர் மோடி மீது பதிந்திருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை, என்று ரோனன் சென் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT