ராமர் பாலத்துக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியுடன் கூறினார்.
மத்திய கப்பல், தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். சென்னை, ஹைதராபாத், குவஹாட்டி, ராஞ்சி உள்ளிட்ட முக்கிய நகரங் களைச் சேர்ந்த பத்திரிகை யாளர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள தேசிய தகவலியல் மைய (நிக் சென்டர்) கூட்டரங்கில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லி பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து மற்ற நகரங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அமைச்சரிடம் கேள்விகள் கேட்டனர்.
சேது சமுத்திர திட்டம், நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூல் பிரச்சினை, துறைமுகம் -மதுரவாயல் உயர்மட்ட விரைவு சாலை திட்டம் தொடர்பான கேள்விகளை சென்னை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். அவற்றுக்கு பதிலளித்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
ராமர் பாலத்துக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். இதற்காக நான்கைந்து மாற்றுவழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சேது திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட ரைட்ஸ் கமிட்டி, தனது பரிந்துரையை சமர்ப்பித்துள்ளது. அந்தப் பரிந்துரைகளை அரசு ஆராயும். சர்வதேச ஆலோசனை அமைப்பின் அறிவுரைகளையும் கணக்கில்கொண்டு சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிப்பது என்பது அரசு - தனியார் கூட்டு திட்ட ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது. சாலை அமைக்கவும், அதை பராமரிக்கவும் செலவிடப்பட்ட தொகை, இதர செலவினங்கள் அடிப்படையில் சுங்கவரி வசூலிக்கும் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் நன்றாக இருக்க வேண்டுமானால் சுங்கவரி செலுத்த வேண்டும். இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதில்லை. கார், லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்கள் வைத்திருப்பவர்களிடம் மட்டும்தான் வரி வசூலிக்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டவிரைவு சாலை திட்டத்தைப் பொறுத்தவரை, இதுகுறித்து மாநில அரசிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.