"ஒரு மனிதர் கவுரவமாக உயிர் துறக்க உரிமை இருக்கிறது" அதனால், மீள முடியாத நோயால் வாடுபவர்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிங்கி விரானி நன்றி தெரிவித்திருக்கிறார்.
மும்பை கெம் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றிய அருணா ஷான்பாக் அங்கு வார்டு பாயாக பணியாற்றியவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால், அவர் கோமா நிலைக்குச் சென்றார். 42 ஆண்டுகளாக கோமா நிலையிலேயே இருந்த அருணா கடந்த 2015-ம் ஆண்டு மறைந்தார்.
அவர் கோமா நிலையில் இருந்தபோது, பிங்கி விரானி உச்ச நீதிமன்றத்தை அணுகினார். தனது தோழி 1973-ம் ஆண்டிலிருந்தே கோமா நிலையில் இருப்பதால் அவரை கருணைக் கொலை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.
இதனையடுத்து, கருணைக் கொலை தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் வலுப்பெற்றது. இதற்கிடையில் அருணா ஷான்பாக் 2015-ல் மறைந்தார்.
இந்நிலையில், இன்றைய தீர்ப்புக்கு பிங்கி விரானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
"உச்ச நீதிமன்றத்துக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த தீர்ப்புக்குக் காரணம் அருணா ஷான்பாக். 42 ஆண்டுகளாக வேதனையுற்ற அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.