இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், பிரதமர் நரேந்திர மோடியை கைவிட்டுவிடக் கூடாது என்று சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "இந்திய முஸ்லிம்கள் நாம் ஆட்டுவிக்கும்படி ஆடுவார்கள் என்று தீவிரவாத அமைப்பினர் நினைத்தால், அவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்தியர்களாக வாழ்வார்கள். அவர்கள் இந்தியாவுக்காக உயிரையும் கொடுப்பார்கள். நாட்டுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
இது குறித்து பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "பிரதமர் மோடி, இந்திய முஸ்லிம்களின் நாட்டுப்பற்றை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தினருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தையே இதன் மூலம் அவர் துவக்கியுள்ளார்.
இதனால் முஸ்லிம்கள் அவரை கைவிட்டுவிடக் கூடாது. நரேந்திர மோடி நமது இந்தியாவின் பிரதமர், இங்கு உள்ள அனைத்து மக்களுக்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அவரே பிரதமர். இதில் பிரிவினை கிடையாது.
ஆனால், முஸ்லிம்களுக்கு நரேந்திர மோடி எதிரானவர் என்பது போன்ற தோற்றத்தை சில போலி இஸ்லாமிய மதசார்பின்மையினர் ஏற்படுத்திவிட்டனர்.
சிவசேனா நியாயமான மற்றும் கடுமையான இந்துத்துவத்தையே பரிந்துரைக்கிறது. இதனையே மறைந்த தலைவர் பால் தாக்கரேவும் வலியுறுத்தினார்.
அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் வென்றால் அதனை இங்கிருந்து கொண்டு போற்றியவர்களையே முஸ்லிம் துரோகிகள் என்றார். அதை தவிர அவருக்கு இந்திய முஸ்லிம்கள் மீது என்றுமே மரியாதை உண்டு.
அந்த வகையில்தான், மோடியின் பேச்சும் உள்ளது. நமது தேசத்து முஸ்லிம்களுக்கு அவர் சான்று அளித்துள்ளார்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.