தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படாதது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்பட தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுபாஷ் அகர்வால் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய ஆறு தேசியக் கட்சிகள் பொது அமைப்புகளாகக் கருதப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வருகின்றன என கடந்த ஆண்டு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அறிவித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடவில்லை. அதேசமயம், மத்திய தகவல் ஆணையத்தின் அறிவுறுத்தல் களையும் பின்பற்றவில்லை.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் இணங்கிச் செயல்படாதது தொடர்பாக, ஏன் விசாரணை நடத்தக்கூடாது என்பது குறித்து விளக்கமளிக்கக் கோரி, சோனியா, அமித் ஷா உட்பட ஆறு தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான்கு வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்காவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நோட்டீஸை தகவல் ஆணையம் அனுப்பியுள்ளது.