இந்தியா

இத்தாலி கடற்படை வீரரின் நிபந்தனையை தளர்த்தி உத்தரவு

செய்திப்பிரிவு

மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு கேரளாவை ஒட்டிய கடற்பகுதியில் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இவர்களில் ஒருவரான மாசிமிலியானோ லட்டோர், மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு மாதம் சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்மனு குறித்து பதிலளிக்கும்படி, தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இத்தாலி வீரர் டெல்லி சாணக்யபுரி காவல் நிலையத்தில் வாரம் ஒருமுறை சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையையும் இரண்டு வாரங்களுக்கு தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT