ஹாதியா திருமணம் செல்லாது என்ற கேரள உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து கேரளாவுக்கு வந்த ஹாதியா தன் மத மாற்றத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களைப் பார்க்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
“எனக்கும் என் பெற்றோர் நெருக்கம்தான், நானும் அவர்களுக்கு நெருக்கமானவர்தான், ஒவ்வொருவரும் தங்கள் சுதந்திரத்தை தேர்வு செய்து கொள்ள முடியாதா? என் பெற்றோரை சில தேச விரோத சக்திகள் தவறாக வழிநடத்துகின்றன. என் பெற்றோர் எனக்கு ரத்த உறவு, எனவே அனைவரையும் விட எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகவே தெரியும்” என்று கோழிக்கோடில் தன் கணவர் ஷஃபின் ஜஹானுடன் நண்பர்களை சந்திக்க வந்த ஹாதியா கூறினார்.
“என் பெற்றோருக்கும் நடந்ததை ஜீரணிக்க கால அவகாசம் தேவைப்படும். இந்த முறை நான் அவர்களைச் சந்திக்கப்போவதில்லை. நான் முஸ்லிம் என்பதை அவர்கள் மனதார ஏற்றுக் கொள்ள கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படும்.
எனக்கு இரு சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன, நான் விரும்பும் மதத்தை தழுவவும், எனக்குப் பிடித்த கணவருடன் வாழவுமான சுதந்திரம் மறுகக்கப்பட்டன. கடைசியாக நான் சுதந்திரம் பெற்று விட்டேன். எனக்கு அதற்கான தகுதி உள்ளது, நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனக்காக நிறைய பேர் பிரார்த்தனை செய்தார்கள். எனக்காக உண்ணாவிரதம் இருந்தனர். அனைவருக்கும் நன்றி.
எனக்கு நடந்தது மீண்டுமொரு முறை இன்னொருவருக்கு நடக்கக் கூடாது என்பதுதான் என் உச்ச நீதிமன்ற வாக்குமூலத்தின் அடிப்படை. ஒவ்வொருவரின் சுதந்திரமும் முக்கியம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம்பிக்கைக்கான சுதந்திரத்தை வழங்குகிறது” என்றார்.