2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தது.
2ஜி வழக்கில் ரூ.200 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக நேற்று அமலாக்கப்பிரிவு நேற்று மேல்முறையீடு செய்த நிலையில், இன்று சிபிஐ முறையீடு செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மிட்டல், சி.ஹரி சங்கர் ஆகியோர் முன் இந்த மனுவை அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரிக்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2ஜி அலைக்கற்றை விதிமுறைகளை மீறி 122 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், குற்றச்சதி, மோசடி, ஏமாற்றுதல், போலியான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க கடந்த 2011-ம் ஆண்டு தனியாக சிபிஐ நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ஒ.பி.சைனி தலைமையிலா கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.
இந்த விசாரணை முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமான அளவில் இல்லை, ஆதாரங்களை எடுத்து வைக்க சிபிஐ தவறிவிட்டதாகக் கூறி கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை விடுவித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார்.
இதேபோலவே 2ஜி வழக்கில் ரூ.200 கோடியே சட்டவிரோதமாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பரிமாற்றம் செய்ததாக அமலாக்கப் பிரிவு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் இருந்தும் கனிமொழி, ஆ.ராசா, சாஹித் பல்வா, ஆசிப் பல்வா, ராஜிவ் அக்வால், கரீம் மோரானி, கலைஞர் டிவி இயக்குநர் சரத்குமார், அமிர்தம் உள்ளிட்ட 17 பேரை விடுவித்து நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.