ஓய்வூதிய நிதியை நிர்வகித்து வரும் இபிஎப்ஓ அமைப்பு, பிஎப் சந்தாதாரர்களுக்கு பொதுவான (யுனிவர்சல்) கணக்கு எண் (யுஏஎன்) வழங்கும் திட்டத்தை அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது வேலை மாறுவோருக்கு பயனளிக்கும்.
இதுதவிர ஊழியர்களின் பிஎப் கணக்கு விவரங்களை நிர்வகிப்பதற்கு வசதியாக நிறுவனங்களுக்கென பொதுவான இணையதளத்தையும் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தொழிலாளர் அடையாள எண் (எல்ஐஎன்) வழங்கப்படும்.
தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் அவ்வப்போது பதிவு செய்யப்படும். ஆண்டு இறுதியில் பிஎப் அமைப்புக்கு ஆன்லைனில் அறிக்கை தாக்கல் செய்ய, நிறுவனங்களுக்கு இது உதவியாக இருக்கும்.
இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
யுஏஎன் மற்றும் எல்ஐஎன் ஆகியவற்றை அறிமுகம் செய்வது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை செயலாளர் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இதில் வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்த வசதியை அறிமுகம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த வசதியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த புதிய முறை அமலுக்கு வந்தால், அமைப்பு சார்ந்த நிறு வனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வேறு ஒரு நிறுவனத்துக்கு பணி மாறும்போது தங்கள் பிஎப் கணக்கை மாற்றக் கோரி விண்ணப் பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.