புனேவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள உருளி தேவச்சி பகுதியில் உள்ள சேலை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை காலை சுமார் 4 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
''திருட்டைத் தடுக்க குடோன் உரிமையாளர்கள் கதவை வெளிப்புறமாகப் பூட்டி விடுவது வழக்கம். ஊழியர்கள் வெளியே தங்க இடமில்லாமல், 6 ஆயிரம் சதுர அடி கொண்ட குடோனிலேயே தங்கியிருந்தனர். மின் இணைப்பில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ ஜுவாலையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து வெளியே செல்ல முடியாததால் உள்ளேயே 5 பேரும் இறந்துவிட்டனர்.
நாங்கள் சென்று அவர்களின் உடலைக் கைப்பற்றியபோது சிலரின் உடல் கரிக்கட்டையாகி விட்டிருந்தது'' என்றார்.
இறந்தவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நண்பர்கள். ராகேஷ் ரியாத் (22), ராகேஷ் மேவால் (25), தர்மரம் வதியாசர் (25) , சூரஜ் சர்மா (25) ஆகிய நால்வரும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவின் லட்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீரஜ் சந்தக்கும் (23) இந்த விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, ''அதிகாலை 4.15 மணி அளவில் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. அத்துடன் 10 தண்ணீர் டேங்குகளும் அனுப்பி வைக்கப்பட்டன. 4.30 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் சென்றனர். எனினும் குடோன் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தால், கதவை உடைக்க நேரமானது. இதற்குள்ளாகவே அங்கிருந்த ஊழியர்கள் உயிரிழந்தனர்'' என்றார்.