இந்தியா

ராகுல் காந்தி - குமாரசாமி சந்திப்பில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் பிடிவாதத்தில் இருக்கும் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, ராகுல் தலைமை பதவியை நிச்சயம் ராஜினாமா செய்யக் கூடாது என்றும், அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தால் அதனை மறுபரிசீலனை செய்யுமாறும் குமாரசாமி வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், குமாரசாமியிடமும் ராகுல் தான் நிச்சயமாக பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும் அதே வேளையில் புதிய தலைவருக்கு உறுதுணையாக இருக்கப் போவதுமாகவும் கூறியிருக்கிறார்.

நாட்டின் 17-வது மக்களவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை நடந்தது. மே 23-ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் பாஜக 303 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

543 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களை மட்டுமே பிடித்தது. அதுவும் ராகுல் காந்தி காங்கிரஸ் கோட்டையான அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோற்றுப் போனார்.

கர்நாடக அரசியல் நிலவரம் பற்றி ராகுலிடம் குமாரசாமி எடுத்துரைத்துள்ளார். கட்சித் தாவப்போவதாக மிரட்டும் எம்.எல்.ஏ.க்களை சமாளிக்க அமைச்சரவையில் மாற்றம் செய்யலாம் என திட்டமிட்டிருப்பதாக ராகுலிடம் குமாரசாமி கூறியிருக்கிறார். மேலும், முன்பைவிட இப்போது கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா சற்றே இணக்கமாக செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மொத்த 28 தொகுதிகளில் பாஜக 26 தொகுதிகளில் வென்றது. காங் - மஜத கூட்டணி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் மாநில அரசியலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே குழப்பம் குறைந்திருப்பதாக ராகுலிடம் குமாரசாமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT