புல்வாமா தாக்குதலை போன்று மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை குண்டு வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தகர்த்தனர். இந்த பயங்கர தாக்குதலில் 15 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் பல பகுதிகளிலும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து அவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மகாராஷ்டிர மாநிலம் நிறுவன தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களை தீ வைத்து மாவோயிஸ்டுகள் நேற்று எரித்தனர். சாலை கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25 வாகனங்களையும் மாவோயிஸ்டுகள் அடித்து நொறுக்கினர்.
இந்தநிலையில், கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து மாவோயிஸ்டுகள், குண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.