உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்தவர்கள் மூவரும் சதான்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய், சுமரி லால் மற்றும் வினோத் ஆகியோர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் ஒருவர், செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. திங்கட்கிழமை அன்று வினோத்தின் உடல்நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் சமூக நலக்கூட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் லக்னோ செல்லும் வழியிலேயே வினோத்தின் உயிர் பிரிந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களின் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து எஸ்.பி. எல்.ஆர்.குமார் கூறும்போது, ''ஆரம்பகட்ட விசாரணையில் கள்ளச்சாராயம் சட்டவிரோதமான முறையில், கன்னையா குமார் என்பவரிடம் இருந்து பராபங்கி எல்லையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல்துறையின் அனுமதியோடு சாராய விற்பனை அமோகமாக நடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கன்னையா கைது செய்யப்படுவார்'' என்றார்.
அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.